Thursday, May 7, 2009

சூரிய வெப்பத்தாக்கத்திற்கு கடைப்பிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள்


* 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்லாமல் தவிர்த்தல்?!

* குடையை பயன்படுத்துதல். இதில் கூச்சம் வேண்டாம். கருப்பு வண்ணத்தை தவிர்த்து மென்மையான வண்ணத்தை பயன்படுத்தலாம்.

* ஸ்டெயிலை தவிர்த்து சூரிய ஒளியை தடுக்கும் வகையிலான குளிர்ச்சி தரும் மூக்குக் கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணிதல்.

* காட்டன் ஆடைகள் நல்ல கைக்கொடுகும். வியர்வையை உறிஞ்சும்.

* காலையில் குளிர்ந்த உணவை உண்ணலாம். பழைய சாதம், கூழ் போன்றவை நாம் மறந்து போன உணவு வகைகள். சாப்பிட்டு பழகிப்பாருங்கள்.

* வீட்டில் மோர் எப்போதும் இருக்கட்டும். லஸ்சியாக , உப்பிட்ட மோராக திரவ உணவை அவ்வப்போது அருந்தலாம்.
கார உணவு இக்கோடைக் காலத்தில் எரிச்சலைத் தரும்.

* கீரை ஜூஸ் (ஒன்றுமில்லை வேகவைத்து சிறிது உப்புச் சேர்த்து வடிகட்டி நீர்தான்) இதில் உப்புசத்து மற்றும் உயிர்ச்சத்துகள் அதிக அளவில் உங்களுக்கு கிடைக்கும்.

* இருசக்கர வாகனங்களை வெயிலின் தாகம் குறையும் வரையில் தவிர்த்தல் நலம்.

* பேருந்தில் சன்னல் ஓரம் உட்கார்ந்தால் நெருப்பாற்றில் நீந்துவது போல. சென்னைவாசிகளை இதை தவிர்கிறார்கள் அனுபவசாலிகள்.

* வீடுகளில் உங்கள் சன்னல் மற்றும் கதவுகளில் ஈரத்துணியை நனைத்து அதிகம் தண்ணீர் இல்லாமல் போர்த்திவிடுங்கள். வெப்பத்தை சற்றுத் தணிக்கும்.

* வேர்க்குரு வந்து விட்டவர்கள் சந்தனத்தை குழைத்து ஆன்மீகவாதிப் போல் பூசிக் கொள்ளுங்கள். சில நாட்களில் பலன் கிடைக்கும்.

* தினமும் குறைந்த பட்சம் இரண்டு முறை குளியல் போடுங்கள். சென்னையில் இருக்கிறீர்களா கவலை வேண்டாம், டவளை எடுத்து நனைத்து பிழிந்து உடம்பை துடைத்துக் கொள்ளுங்கள்.

* வெளியேச் செல்லும் போது குடிநீர் சிறிய பாட்டில்களிலாவது கொண்டு செல்லுங்கள். வறட்சியின் போது நாக்கை நனைத்துக் கொள்ளுங்கள்.

* கர்சீப்பை நனைத்து ஈரத்துடன் தலையில் போட்டு நடக்க ஆரம்பியுங்கள்.

Thursday, April 23, 2009

அது ஒரு நிலாக்காலம்.

நான் பள்ளியில் படித்த காலத்தை நினைத்தால் இப்போது இனிமையாக இருக்கிறது. அப்போது எங்கள் ஊருக்கு மின்சாரம் வராத நாட்கள். பகலில் மரத்தடியில் அமர்ந்து படிப்போம். இரவில் வீட்டில் திண்ணையில் அமர்ந்து மண்ணெண்ணெய் விளக்கில் படிப்போம்.

 எனவே இந்த மின்சார வெட்டு எங்களை ஒன்றும் செய்யவில்லை. விவசாய காலங்களில் வயலுக்கு சென்று வேலை செய்யவேண்டும் . பெரும்பாலும் காலையில் காப்பி கொண்டு சென்ற நினைவு இருக்கிறது. அதன் பின் அங்கு களத்தில் அல்லது வயல் வரப்பில் அமர்ந்து வேலை செய்பவர்களை கவனிப்பேன். 

கோடை காலங்களில் வயலில் மாடு கட்டி உழுவார்கள்.முன் காலங்களில் கிணறு ஊற் று தோண்டி ஏற்றம் போட்டு தண்ணீர் இரைப்போம். கிணற்றில் முங்கிலால ரவுண்டாக வலயம் போல் செய்து கிணற்றுக்குள் வைத்து சுற்றிலும் மண் மூடி இருக்கும் அது தான் ஊற் று எனப்படும். அதன் ஒரு புறத்தில் தென்னை மரத்தை நடுவில் தோண்டி எடுத்து வாய்க்கால் போல் செய்து அதில் தண்ணீர் இறைத்து வயலுக்கு பாச்சுவார்கள்.வயலில் மடை திறந்து அனைத்து பத்திகளுக்கும் தண்ணீர் விடுவது தான் எனது வேலை. 

பிற்காலத்தில் டீசல் எஞ்சின் அதன் பின் மோட்டார் பம்பு வந்தது. டீசல் எஞ்சின் ஓடும்போது கேட்கும் அதிக சப்தம் நன்கு ஞாபகம் உள்ளது. மணிகொரு முறை டீசல் போட வேண்டும் . மோட்டார் ஓடும் போது அந்த வேலை இல்லை. கரண்ட் நின்று வயலுக்கு போய் வரும் போது மோட்டார் ஸ்டார்ட் பண்ண வேண்டும்.

 நாற்று நாடும் போது , அறுவடை செய்யும் போது , போரடிக்கும் போது பள்ளிக்கு லீவு போட்டு விட்டு வயலுக்கு செல்லவேண்டும். வைக்கோல் வீணாக கூடாது என்பதற்க்காக கோடை காலங்களில் இரவில் போரடிப்பர்கள். வயலின் நடுவில் இருக்கும் களம் என்ற மேட்டு பகுதியில் நெல் அடிப்பதும் ( அறுவடை செய்த) , போர் அடிப்பதும் நடக்கும். ஒரு கயிற்று கட்டிளை போட்டு அதில் அமர்ந்து இருப்போம். நன்றாக காற்று அடிக்கும் . மிகவும் நன்றாக இருக்கும் . போரடிக்கும் போது மாடுகளை ஓட்டி செல்ல வேண்டும். மிகவும் இனிமையான காலங்கள் அவை

வானத்தில் மேகங்கள் கோலம் போட்டது போல் இருக்கும் . அவை வேகமாக நகருவதையும் , பறவைகள் கூட்டமாய் பறப்பதை பார்ப்பது கண் கொல்லா காட்சியாகும்.

 வயலில் இரண்டு போகம் நெல் சாகுபடி செய்வோம். முதலில் குறுவை அதன் பின்பு தாளடி. கோடையில் எள், உளுந்து , பயிறு பயிரிடுவோம். தாளடியில் எப்போதும் மழையில் கஷ்டபடுவோம். நெல்லை காய வைக்கவும் வைக்கோலை காய வைக்கவும் மிகவும் சிரமப்படுவோம்.

 சில வருடங்கள் கரும்பு போட்டிருந்தோம். அது ஒரு வருட பயிர். கோடையில் கரும்பு வெட்டி கரும்பு ஆலைக்கு அனுப்ப வேண்டும். லாரி வரும் வரை ரோட்டில் காவல் காக்க வேண்டும். அப்போது மாட்டு வண்டி தான் வெளியூர் போவதற்கு. அதை ஓட்ட வண்டிக்காரர் உண்டு. 3 km தூரத்தில் உள்ள டவுனுக்கு போய் மளிகை சாமான்கள் வாங்கி வருவோம். ஒரு கூடையில் வங்கி வருவோம். அதே போல் நல அரைக்க , நல்லெண்ணெய் , தேங்காயெண்ணெய் செக்கில் ஆட்டி வருவோம்

மாதா மாதம் தேங்காய் வெட்டி வருவதும் இனிமையான வேலை. ஒரு பத்து தென்னை தோப்புகளுக்கு போய் வெட்டி வருவோம். வெட்டிய தேங்காய மாட்டு வண்டியில் எடுத்து வருவோம். அப்போது இளநீர் வெட்டுவோம். சித்திரையில் பன நுங்கு நன்றாக இருக்கும் . எங்களுடைய பனை மரத்தில் பனங் குலை வெட்டி வந்து தேவைப்படும்போது வெட்டி சாப்பிடுவோம்.

 இரவில் நிலவை பார்த்து கதை சொல்லுவோம். சினிமா பேரை ஒவ்வொருத்தராய் ஒவ்வொரு எழுத்தை சொல்லி தொடரவேண்டும். அப்போது படங்களின் எண்ணிக்கை குறைவு. எல்லா படங்களின் பெயரும் தெரியும். அருகில் உள்ள பட்டணத்தில் சினிமா பார்ப்போம். இப்போதும்  அந்த தியேட்டர் இருக்கிறது. 

காலையில் பேப்பர் , தபால் வராது மதியம் ஒரு மணிக்கு மேல்தான் வரும். எனவே காலையில் பட்டணம் போய் வங்கி வருவோம். பேப்பர்காரரும் எங்கள் தெருவில் வாங்கும் அத்தனை பேப்பரும் எங்களிடம் தந்து விடுவார். எனவே தின தந்தியுடன், தினமணி யும் படிப்போம்.

 குமுதம் எங்கள் வீட்டில் வாங்குவோம். பக்கத்து வீட்டில் ராணியும் , முதல் வீட்டில் ஆனந்த விகடனும் வாங்குவார்கள். ஏதேனும் சிறப்பு மலர் என்றால் நாங்களும் விகடன் வாங்குவோம்,அப்படி ஆனந்த விகடனின் மாவட்ட மலர் அனைத்தும் வாங்கி உள்ளோம். குமுதத்தில் வைர மோதிரக்கதை அப்போது பிரபலம்.

Friday, April 10, 2009

அந்த நாட்கள் மிக ரம்மியமான நாட்கள

 
எனது விடுமுறை நாட்களில் எனக்கு பிடித்தமான செயல, எனது சிறு வயது நாட்களை நினைத்து பார்த்தல் ஆகும். ஒரு சிறிய கிராமத்தில் பணவசதி , மின் வசதி , பேருந்து வசதி இல்லாத நிலையில் , வங்கியில் படிப்புக்கு கடன் வாங்கி என்னை இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்க வைத்து தமிழ் நாட்டிலேயே வேலை பார்க்க வைத்து என்னை இந்த நிலைக்கு (முதன்மை அதிகாரி) கொண்டு வந்த என் அப்பாவின் நினைவுதான் அதில் முதலில் வருவது . 

எங்கள் கிராமம் ஒரு ஆற்று பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.ஆற்றில் தண்ணீர் வரும் பொது ஆற்றின் குறுக்கே உள்ள குறுகிய மூங்கில் பாலத்தில் நடந்து வர தைரியம் வேண்டும்.பாலத்தில் உள்ள பலகைகள் ஆணி இல்லாமல் ஆடிக்கொண்டு பயத்தை உண்டுபண்ணும்.இரவு நேரத்தில் கேட்க வேண்டாம்.ஆற்றில் தண்ணீர் வரும்போது மாட்டு வண்டியில் ஆற்றை கடந்து வர மிகவும் பயமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நான் கல்லூரியிலுருந்து வரும்போது ஆற்றங்கரையில் பஸ் வரும்வரை காத்திருந்து என்னை வீட்டுக்கு அழைத்து செல்வார்கள். அவர்கள் இப்போது இல்லை.அவர்கள் மறைந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன.

எனது அம்மா இப்போது எனது தம்பியுடன் அதே கிராமத்தில் இருக்கிறார்கள். கிராமம் இப்போது மிகவும் முன்னேறிவிட்டது. ஆற்றுக்கு பாலம் கட்டிவிட்டார்கள். மின்சாரம்,கேபிள் டிவி , பஸ் வீட்டுக்குவீடு பைக் ஸ்கூட்டர் வந்துவிட்டது. முன்பு போல் யாரும் மாட்டுவண்டி எங்கும் உபயோகிப்பது இல்லை.குடவாசலிலுருந்து வரவேண்டுமென்றால் ஆட்டோ பிடித்து வரலாம்.

எட்டாவதுவரை உள்ள எங்கள் ஊர் பள்ளிகூடத்தில படித்துவிட்டு பின்னர் SSLC வரை குடவாசல் பள்ளியில் படித்த நினைவுகள் என்றும் பசுமையாக நினைவில் உள்ளது.ஆரம்பத்தில் தினமும் 2 மைல் நடந்து பள்ளிக்கூடம் சென்றுவந்தேன் பின்னர் சைக்கிளில் சென்றுவந்தேன் .நடந்து போகும்போது ஏற்பட்ட சந்தோசம் சைக்கிளில் போகும்போது ஏற்படவில்லை. தினமும் திரும்பிவரும்போது மளிகை சாமான்கள் வாங்கிவருவேன். வரும்போது ஆற்றில் இறங்கி சைக்கிள் மணலில் தள்ளிக்கொண்டு வருவேன். கோடை காலங்களில் காய்ந்த வயல்களில் இறங்கி நடந்து செல்வேன்.

வாரவாரம் ஞாயிறு அன்று ஆற்றங்கரைக்கு சென்று அந்த பாதையில் போகும் பேப்பர்காரரிடம் குமுதம் புத்தகம் வாங்கிவருவேன். அப்போது முதல் படிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. குமுதத்தில் வரும் தொடர்கதைகளை பயிண்டு செய்து வைப்போம்.

எங்கள் தெரு முதல் வீட்டில் ஆனந்த விகடன் வாங்குவார்கள். எனவே அவர்கள் வீட்டில் விகடன் படித்த நினைவு இருக்கிறது.அதில் அட்டை படம் ஜோக் இருக்கும்.பக்கத்துக்கு வீட்டில் ராணி புத்தகம் வாங்குவார்கள்.அதையும் அங்கு சென்று படிப்பேன்.தினமும் வயலுக்கு சென்று வயல் வேலை செய்வதை பார்ப்பதும் , மாதாமாதம் தேங்காய் வெட்டுவதும் , மனதில் மறக்காத நினைவாக இன்னமும் இருக்கிறது.

பண்டிகைகள் மிக நன்றாக கொண்டாடுவோம். தீபாவளிக்கு பல நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் செய்ய மாவு அறைத்து வருவோம். சாதா முறுக்கு, முள்ளு முறுக்கு, ரவா உருண்டை ,மைசூர் பாக்கு, தேங்காய் பாறை முதலிய பலகாரங்கள் வீட்டில் செய்வார்கள்.

பொங்கலுக்கு கரும்பு ,வாழைபழம் , மஞ்சள், இஞ்சி , பாட்டாசு முதலியவை குடவாசல் மாட்டுவண்டியில் சென்று வாங்கிவருவதும் நினைவு உள்ளது. பொங்கல் மற்றும் தீபாவளிக்கு வரிசை பொருட்கள் என்கண் மற்றும் ஆரியச்சேரி சென்று அக்காக்களுக்கு கொடுத்து வருவோம். தீபாவளிக்கு புது டிரஸ் வாங்குவது சந்தோஷமாக இருக்கும் . கும்பகோணம் சென்று டிரஸ் வாங்கிவருவோம். அக்கா யாராவது அங்கு கடைக்கு நீராக வருவார்கள் அவர்கள் வரிசை புடவை தேர்ந்தெடுப்பார்கள்.
பிள்ளையார் சதுர்த்திக்கும் மாட்டு பொங்கலுக்கும் பிள்ளையார் கோவிலுக்கு செல்வோம்.மாடுகளுக்கு மாலை போடுவோம்.

PUC படிக்க பூண்டி கல்லூரியில் சேர்த்தேன் .முதல் முதலாத வீட்டைவிட்டு வெளியே விடுதியில் தங்கி படித்தேன். என் வாழ்வில் மிகவும் சந்தோஷமான நாட்களில் அந்த நாட்களும் ஒன்று.
நன்கு படித்து நல்ல மார்க் வாங்கி இன்ஜினியரிங் காலேஜில் சேரவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருந்தகாலம் அது.
சேர்த்த முதல் நாள் அங்கு வந்த மாணவர்களின் அப்பாக்கள் ஒன்று சேர்ந்து விடுதி அறை நண்பர்களை சேர்த்துவிட்டார்கள்.
செழும்பரிதி,சுந்தர் , குமரகுருபரன் ,முருகானந்தம் ஆகியோர் பெயர் நினைவுக்கு வருகிறது.அவர்கள் திருத்துறைபூண்டி,மன்னார்குடி மாணவர்கள். வாரவாரம் வீட்டுக்கு வந்துவிடுவேன். அழுக்கு துணிகளை துவைத்து எடுத்து செல்வேன்.

இன்ஜினியரிங் படிப்பு காரைக்குடி அழகப்பா இன்ஜினியரிங் படித்தேன்.மிகவும் இனிமையான நாட்கள் அவை .தினமும் மாலையில் கல்லூரிக்கு சென்று போட்டி போட்டுகொண்டு படிப்போம்.

கணக்கில் எல்லா செமஸ்டர்களிலும் 100 % மார்க் வாங்கினேன். மூன்றாம் வருடத்தில் ECE பிரான்ச் செலக்ட் செய்தேன்.அந்த பிரிவில் நன்றாக படித்து எல்லா வருடங்களிலும் முதல் ரேங்க் வாங்கினேன்.

காலேஜ் டூர் மூன்று முறை சென்று வந்தோம். மூன்றாம் வருடத்தில் திருச்சி,ஊட்டி, மெட்ராஸ் சென்றுவந்தோம். நான்காம் வருடத்தில் திருவனத்தபுரம்,பெங்களூர்,மைசூர், ஹைதராபாத் சென்றுவந்தோம். கடைசி வருடத்தில் கோவா , பாம்பே , டெல்லி , ஆக்ரா , ஸ்ரீநகர் சென்று வந்தோம்.
ஸ்ரீநகர் முதல் ஜம்முதாவி வரை விமானத்தில் வந்தோம்.
முதல் விமானப்பயணம் நன்றாக இருந்தது.

காரைக்குடி காலேஜ் டவுனிலிருந்து தனியாக உள்ளது.எனவே தினமும் எப்போதும் படிப்பதுதான் வேலை. வாரம் ஒருமுறை டவுன் போய்வருவோம்.டவுன் பஸ் அல்லது வாடகை சைக்கிள் எடுத்து போய்வருவோம். மாதமொருமுறை நானும் நாலைந்து நண்பர்களும் குன்றக்குடி கோயில் போய்வருவோம்.
ஆண்டு விடுமுறையில ஊருக்கு வருவோம்.ஆனால் study லீவ் நாட்களில் அங்கேயே தங்கி படிப்போம்.

காலேஜ் நாட்கள்

அழகப்பா இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்த முதல் நாள் இன்னமும் நினைவில் உள்ளது.

மிகுந்த மகிழ்ச்சியோடு புது நண்பர்களோடு காலேஜ் மற்றும் விடுதி வாழ்கையை தொடங்கினோம்.காரைக்குடி டவுனுக்கு சென்று புது டிரஸ் , புது ஷூ வாங்கிவந்தோம்.காலேஜ் கடையில் புத்தகம்,நோட் புத்தகம் வாங்கி படிக்க தொடங்கினோம் .முதல் வருடம் SCH என்னும் ஹாஸ்டலில் ரூம் எண் 39 என்னுடைய ரூம்.இது முதல் மாடியில் இரண்டாவது ரூம் ஆகும்.

விஜிடரியன் உணவு விடுதி சாப்பாடு நன்றாக இருக்கும்.என்னுடன் நாலைந்து நண்பர்கள் எப்போதும் படிக்க செல்லும்போதும், சாப்பிட போகும்போதும் உடன் வருவார்கள். அவர்களில் சிவநேசன் , சிவசுப்ரமணியம், அசோகன் பெயர் நினைவுக்கு வருகிறது. தினமும் மாலை , மற்றும் இரவு சாப்பிட்ட பின்னரும் படிக்க முருகப்பா ஹால் அல்லது மெயின் பில்டிங் ஹால் செல்லுவோம் . தினமும் இரவு 9 மணிவரை படித்துவிட்டு வருவோம். விடுமுறை நாட்களில் ஆலமரம் செல்லுவோம். என்னுடைய எல்லா நண்பர்களும் எல்லா பரீட்சைகளிலும் நல்ல மார்க் வாங்குவோம். 

மெஸ்ஸில் சாப்பாடு தயாராகும் வரை , மாடியில் புத்தகம் மற்றும் பேப்பர் இருக்கும் .டேப் ரிகார்டரில் பாட்டு கேட்டுகொண்டே படித்துவிட்டு பொழுது போக்குவோம். மெஸ்ஸில் ஞாயிறு காலை மசால் தோசை நன்றாக இருக்கும் .தினமும் மாலையில் காப்பி,டீ மற்றும் பப்ஸ், கேக்,ஸ்வீட் காரம் ஏதேனும் ஒன்று இருக்கும்.

இரண்டாவது வருடம் ENH என்னும் விடுதியிலும் மூன்றாம் வருடம் ETH என்னும் விடுதியிலும் நான்காவது வருடம் TNH என்னும் விடுதியிலும் கடைசி வருடம் KNH என்னும் விடுதியிலும் தங்கினோம். இரண்டாவது வருடம் ENH என்னும் விடுதியிலும் மூன்றாம் வருடம் ETH என்னும் விடுதியிலும் நான்காவது வருடம் TNH என்னும் விடுதியிலும் கடைசி வருடம் KNH என்னும் விடுதியிலும் தங்கினோம்.

எல்லா விடுதியிலும் முன்புறம் விளையாடும் இடம் இருக்கும்.மாலை நேரங்களில் யாராவது விளையாடிகொண்டே இருப்பார்கள். ஹாஸ்டல் அருகில் டீ கடையும் சைக்கிள் வாடகை கடையும் இருக்கும். காரைக்குடி டவுனுக்கு போகவேண்டுமானால் சைக்கிள் எடுத்துக்கொண்டு போவோம். கேரியர் இருக்காது.இரவு செகண்ட் ஷோ சினிமா போவோம்.காரைக்குடி டவுன் அல்லது கோட்டையூர் போவோம்.

நெய்வேலி அன்றும் இன்றும ( Neyveli Township )

நெய்வேலி முன்பு ஒரு அமைதியாக இருந்தது.ஒரேயொரு அமராவதி சினிமா கொட்டகை மட்டும் இருந்தது. சொரத்தூர் மற்றும் செடுத்தான் குப்பம் ஆகிய இடங்களில் டென்ட் சினிமா கொட்டகைகள் இருந்தன .புது படங்கள் அமராவதியிலும் பழைய படங்கள் அங்கும் பார்போம். அமராவதி சினிமா கொட்டகை NLC க்கு சொந்தமானது. முன்பதிவு எல்லாம் உண்டு.

முன்பு பிலிம் ரூல் வந்தால்தான் படம். இப்போது டிஷ் அன்டன்னா மூலம் டிஜிட்டல் படம் எல்லா சினிமா கொட்டகைக்கும் வந்து விட்டது.

இப்போது டெய்லி மார்கட் இருக்கும் இடத்தில் காய்கறி மார்க்கெட் இருந்தது.ARC மட்டும் தான் நகைகடை .ICH மட்டும் அப்படியே உள்ளது.புளு டையமண்டு ஹோட்டல் புதிதாக வந்தது. 27 ஆம் பிளாக் உடுப்பி , 10 ஆம் ராம் பவன் , 26 ஆம் பிளாக் சொர்ணபவன் ஆகிய ஹோட்டல் களும் புதுக்குப்பம் ஹோட்டல் அப்போது இருந்தன. நெய்வேலியிலிருந்து சிதம்பரம் , கடலூர் , பண்ருட்டி , விருத்தாசலம் தவிர மற்ற ஊர்களுக்கு அதிகம் பஸ் கிடையாது.

நெய்வேலியிலிருந்து சிதம்பரம் , கடலூர் , பண்ருட்டி , விருத்தாசலம் தவிர மற்ற ஊர்களுக்கு அதிகம் பஸ் கிடையாது. அப்போது தான் பண்ருட்டி நெய்வேலி தெர்மல் டவுன் பஸ்சும் நெய்வேலி டவுன்ஷிப் விருத்தாசலம் டவுன் பஸ்சும் விட்டார்களா. எராளமான NLC பஸ் அப்போதே உண்டு.

அப்போது போன் வசதி யாரிடமும் கிடையாது . போஸ்ட் ஆபிசில் கால் புக் செய்து கால் கிடைக்கும் வரை வெயிட் பன்ன வேண்டும்.STD பேச 16 ஆம் போன் ஆபிசிலிருந்து பேச வேண்டும்.வெலியுரிலிருந்து பேச வேண்டுமானால் போஸ்ட் ஆபிசுக்கு பண்ணினால் கூப்பிட்டு வருவார்கள் . எப்போதோ வீட்டுக்கு வீடு போன் ஆளுக்கு ஆள் செல் போன் .

முன்பு படம் எடுக்க கெம்பு ஸ்டுடியோ போக வேண்டும். கேமரா , பிலிம் ரோல் எடுத்துக்கொண்டு டூர் போகவேண்டும் . பிலிம் ரோல் கழுகுவதும் பிரிண்ட் போடுவதும் பெரிய வேலை. இப்போது டிஜிட்டல் கேமரா எல்லோரிடமும் வந்துவிட்டது.

அப்போது டிவி யே கிடையாது. பின்னர் மெட்ராஸ் , சிலோன் டிவி , ஆண்டனா போட்டால் தெரியும். சிலர் வீட்டில் மட்டும் டிவி இருக்கும். ஞாயிறு படம் அற்றும் வெள்ளி ஒலியும் ஒளியும் பார்க்க அவர்கள் வீட்டிற்கு அவர்கள் நண்பர்கள் குடும்பத்துடன் வருவார்கள் .அப்போது உலக கிரிகட் மேட்ச் ரொம்ப பாப்புலர்.கபில்தேவ் அதிரடியாக் விளையாடி கப் வாங்கினோம்.

சமீபத்தில் தான் கேபிள் டிவி வந்தது. சன் டிவி யும் பிபிஸி, ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்னும் நான்கு சேனல்கள் தெரிந்தன.
அதற்கு டிஷ் ஆண்டெனா போடவேண்டும். ஹோடேல்களிலும் பணக்கார வீடுகளிலும் அவை இருந்தன. அதற்கு டிஷ் ஆண்டெனா போடவேண்டும். ஹோடேல்களிலும் பணக்கார வீடுகளிலும் அவை இருந்தன.

நானும் எனது நண்பர் உலகப்பனும் ஆரம்பத்திலேயே டிவி வாங்கிவிட்டோம் .மெட்ராஸ் பார்க்க நாங்களே ஒரு அன்ட்டேன்னா தயார் செய்தோம் .ஒரு பூஸ்ட்ர் மட்டும் மெட்ராஸ் ரிட்சி தெருவில் வங்கி வீட்டின் மேல் ஒரு மூங்கில் மரத்தில் கட்டினோம். மெட்ராஸ் 1 & 2 மற்றும் இலங்கை தெரிந்தது. உடனே மற்றும் இரண்டு பூஸ்ட்ர் வாங்கி எங்கள் சொந்த ஊரிலும் டிவி பார்கவைத்தோம்.

பின்னர் NLC இல் கேபிள் அமைக்கப்பட்டது. இப்போது சுமார் 75 சேனல்கள் வருகின்றன.அப்போது வந்த பிபிஸி இப்போது வரவில்லை . சன் தொடர்ந்து வருகிறது. கோல்டன் ஈகிள் ஸ்டார் விஜய் ஆனது.

நடுவில் PC எல்லா வீட்டுக்கும் வந்து விட்டது. அனைத்து பசங்களும் வீடியோ கேம்ஸ் விளையாட கற்றுகொண்டர்கள். இப்போது இன்டர்நெட் வந்துவிட்டது. எல்லோரும் இப்போதும் ஈ மெயில் பார்க்க , படம் டவுன் லோட் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். பல வருடங்கள் PC வைத்துள்ள எனது நண்பர் பலருக்கு ஈ மெயில் அனுப்ப நான் தான் உதவி செய்ய வேண்டும். ஆனம் வாய்ஸ் சாட்டிங் மற்றும் வீடியோ சாட்டிங் பண்ணும் நண்பர்களும் இருக்கிறார்கள்.

நெய்வேலி வந்த உடன் எங்களுக்கு 27 ஆம் வட்டத்தில் மூன்று பேருக்கு ஒரு வீடு வீதம் வீடு கொடுத்தார்கள் . நாங்கள் ஒரு வீட்டில் தங்காமல் அதை மெஸ் ஆக அமைத்தோம். ஊரிலுருந்து சமையலுக்கு ஆள் வைத்தோம். நல்ல சாப்பாடு கிடைத்தது. நாங்கள் 15 பேர் சேர்த்து மெஸ் நடத்தினோம். யாரவது ப்ரீ ஆக இருப்பவர் மளிகை சாமானும் கறிகாய்களும் வாங்கி தர வேண்டும் என்று ஏற்பாடு.

எனது நண்பர் அனைவரும் சிதம்பரத்தில் பார்ட் டைம் ME வகுப்பு சேர்ந்து படித்தார்கள். எனவே நான் தான் அனைத்து பொருட்களையும் வாங்கிதர நேரிட்டது. வாரா வாரம் ஞாயிறு இரவு மெஸ் விடுமுறை .

அப்போது மெயின் பஜாரில் நேரு மளிகையும் நெய்வேலி மளிகையும் தான் கடைகள். அப்போது புதிதாக சேர்ந்தவர்களுக்கு 27 பிளாக் அல்லது 10 ஆம் பிளாக்கில் வீடு கொடுத்தார்கள்.பின்னர் 5 ஆம் ப்ளாக் 6 ஆம் ப்ளாக் காட்ட ஆரம்பித்தார்கள்.

எனக்கு திருமணம் 1983 இல் திருமணம் விருதாச்சலத்தில் நடந்தது. எங்கள் பாட்ச்சில் முதல் திருமணம். எனது நண்பர்கள் அனைவரும் வந்தார்கள். தனி வீடு 6 மாதம் கழித்து தான் கொடுத்தார்கள்.அதுவரை தினமும் விருதாச்சலத்தலிருந்து வேலைக்கு வந்தேன்.

பின்னர் 5 ஆம் பிளாக்கில் டைப்-1 வீடு கிடைத்தவுடன் அங்கு சென்றேன். அப்போது தான் கட்டிய புதிய வீட்டிற்கு நாங்கள் சென்றோம். பின்பு பல வீடுகள் மாறி எப்போது உள்ள 12 ஆம் பிளாக் வந்தோம். மிகவும் வசதியாய் மெயின் பஜார் அருகில் உள்ளது .இங்கு வந்து சுமார் 8 வருடங்கள் ஆகி விட்டது. இப்போது கார் வங்கி அதற்கு கொட்டகை கட்டி உள்ளோம்.

அப்போது ஜவஹர் பள்ளிகூடத்தில் சீட் வாங்குவதற்கு இடம் பிடிக்க முதல் நாளே இரவு செல்ல வேண்டும். மாதா மாதம் பணம் கட்டவும் மிகவும் சிரமப்படவேண்டும். குழைந்தைகள் டாக்டர் முருகன் ரொம்ப நல்லவர். எப்போதும் ஆஸ்பத்திரியில் கூட்டமாக இருக்கும். ஆனாலும் நன்கு பார்ப்பார்.

அப்போது பெங்களூர் போக மாலையில் ஒரு ரயில் உண்டு அதில் நான் பெங்களூர் போயிருக்கிறேன் .மெட்ராஸ் போக விமானம் உண்டு. அதிலும் நான் போயிருக்கிறேன் . போஸ்ட் ஆபிஸ் NSC மிகவும் பாப்புலர் ஆன இன்கம் டாக்ஸ் சேவிங் ஸ்கீம் .எல்லோரும் வாங்குவார்கள். அதற்கு குலுக்கலில் பரிசும் உண்டு. எனக்கு பரிசு கிடைத்ததில்லை. போடும்போது ஒரு பர்சன்ட் இன்சென்டிவ் கொடுப்பார்கள்.

அப்போது பஸ் ஸ்டாண்டில் ரிக்க்ஷா பிடித்து வீட்டுக்கு வர வேண்டும். ஆட்டோ அதிகம் இருக்காது. விருத்தாசலத்தில் அப்போது குதிரை வண்டிதான்.

எனக்கு மேல் அதிகாரி சுதர்சன பிள்ளை என்பவர். மிகவும் நேர்மையான் நல்ல அதிகாரி. நான் அவரிடம் வேலைக்கு சேர்ந்தது முதல் அவர் ஒய்வு பெரும் வரை அவரிடம் சுமார் 17 வருடங்கள் வேலை பாத்தேன். இப்போது அவர் சித்தூரில் இருக்கிறார்.

அப்போது மெயின் பஜார் பார்க் உடறபயிற்சி செய்யும் இடமாக இருந்தது. நாங்கள் தினமும் 27 ஆம் வட்டத்திலிருந்து நடந்து வந்து உடற் பயிற்சி செய்துவிட்டு செல்வோம் .பார்க்கில் நடுவில் ஒரு ஆவின் பால் கடை இருந்தந்து. அது இடம் மாறி எப்போதும் இருக்கிறது.

எட்டு ரோட்டில் அப்சரா என்னும் அசைவ ஹோட்டலும் 26 ஆம் ப்ளாக் லில்லி சலூனும் அப்போது பிரபலம். அப்போது டேப் ரிக்கார்டர், பின்னர் வீடியோ , இப்போது CD மற்றும் DVD இல்லாத வீடு இல்லை .