Thursday, April 23, 2009

அது ஒரு நிலாக்காலம்.

நான் பள்ளியில் படித்த காலத்தை நினைத்தால் இப்போது இனிமையாக இருக்கிறது. அப்போது எங்கள் ஊருக்கு மின்சாரம் வராத நாட்கள். பகலில் மரத்தடியில் அமர்ந்து படிப்போம். இரவில் வீட்டில் திண்ணையில் அமர்ந்து மண்ணெண்ணெய் விளக்கில் படிப்போம்.

 எனவே இந்த மின்சார வெட்டு எங்களை ஒன்றும் செய்யவில்லை. விவசாய காலங்களில் வயலுக்கு சென்று வேலை செய்யவேண்டும் . பெரும்பாலும் காலையில் காப்பி கொண்டு சென்ற நினைவு இருக்கிறது. அதன் பின் அங்கு களத்தில் அல்லது வயல் வரப்பில் அமர்ந்து வேலை செய்பவர்களை கவனிப்பேன். 

கோடை காலங்களில் வயலில் மாடு கட்டி உழுவார்கள்.முன் காலங்களில் கிணறு ஊற் று தோண்டி ஏற்றம் போட்டு தண்ணீர் இரைப்போம். கிணற்றில் முங்கிலால ரவுண்டாக வலயம் போல் செய்து கிணற்றுக்குள் வைத்து சுற்றிலும் மண் மூடி இருக்கும் அது தான் ஊற் று எனப்படும். அதன் ஒரு புறத்தில் தென்னை மரத்தை நடுவில் தோண்டி எடுத்து வாய்க்கால் போல் செய்து அதில் தண்ணீர் இறைத்து வயலுக்கு பாச்சுவார்கள்.வயலில் மடை திறந்து அனைத்து பத்திகளுக்கும் தண்ணீர் விடுவது தான் எனது வேலை. 

பிற்காலத்தில் டீசல் எஞ்சின் அதன் பின் மோட்டார் பம்பு வந்தது. டீசல் எஞ்சின் ஓடும்போது கேட்கும் அதிக சப்தம் நன்கு ஞாபகம் உள்ளது. மணிகொரு முறை டீசல் போட வேண்டும் . மோட்டார் ஓடும் போது அந்த வேலை இல்லை. கரண்ட் நின்று வயலுக்கு போய் வரும் போது மோட்டார் ஸ்டார்ட் பண்ண வேண்டும்.

 நாற்று நாடும் போது , அறுவடை செய்யும் போது , போரடிக்கும் போது பள்ளிக்கு லீவு போட்டு விட்டு வயலுக்கு செல்லவேண்டும். வைக்கோல் வீணாக கூடாது என்பதற்க்காக கோடை காலங்களில் இரவில் போரடிப்பர்கள். வயலின் நடுவில் இருக்கும் களம் என்ற மேட்டு பகுதியில் நெல் அடிப்பதும் ( அறுவடை செய்த) , போர் அடிப்பதும் நடக்கும். ஒரு கயிற்று கட்டிளை போட்டு அதில் அமர்ந்து இருப்போம். நன்றாக காற்று அடிக்கும் . மிகவும் நன்றாக இருக்கும் . போரடிக்கும் போது மாடுகளை ஓட்டி செல்ல வேண்டும். மிகவும் இனிமையான காலங்கள் அவை

வானத்தில் மேகங்கள் கோலம் போட்டது போல் இருக்கும் . அவை வேகமாக நகருவதையும் , பறவைகள் கூட்டமாய் பறப்பதை பார்ப்பது கண் கொல்லா காட்சியாகும்.

 வயலில் இரண்டு போகம் நெல் சாகுபடி செய்வோம். முதலில் குறுவை அதன் பின்பு தாளடி. கோடையில் எள், உளுந்து , பயிறு பயிரிடுவோம். தாளடியில் எப்போதும் மழையில் கஷ்டபடுவோம். நெல்லை காய வைக்கவும் வைக்கோலை காய வைக்கவும் மிகவும் சிரமப்படுவோம்.

 சில வருடங்கள் கரும்பு போட்டிருந்தோம். அது ஒரு வருட பயிர். கோடையில் கரும்பு வெட்டி கரும்பு ஆலைக்கு அனுப்ப வேண்டும். லாரி வரும் வரை ரோட்டில் காவல் காக்க வேண்டும். அப்போது மாட்டு வண்டி தான் வெளியூர் போவதற்கு. அதை ஓட்ட வண்டிக்காரர் உண்டு. 3 km தூரத்தில் உள்ள டவுனுக்கு போய் மளிகை சாமான்கள் வாங்கி வருவோம். ஒரு கூடையில் வங்கி வருவோம். அதே போல் நல அரைக்க , நல்லெண்ணெய் , தேங்காயெண்ணெய் செக்கில் ஆட்டி வருவோம்

மாதா மாதம் தேங்காய் வெட்டி வருவதும் இனிமையான வேலை. ஒரு பத்து தென்னை தோப்புகளுக்கு போய் வெட்டி வருவோம். வெட்டிய தேங்காய மாட்டு வண்டியில் எடுத்து வருவோம். அப்போது இளநீர் வெட்டுவோம். சித்திரையில் பன நுங்கு நன்றாக இருக்கும் . எங்களுடைய பனை மரத்தில் பனங் குலை வெட்டி வந்து தேவைப்படும்போது வெட்டி சாப்பிடுவோம்.

 இரவில் நிலவை பார்த்து கதை சொல்லுவோம். சினிமா பேரை ஒவ்வொருத்தராய் ஒவ்வொரு எழுத்தை சொல்லி தொடரவேண்டும். அப்போது படங்களின் எண்ணிக்கை குறைவு. எல்லா படங்களின் பெயரும் தெரியும். அருகில் உள்ள பட்டணத்தில் சினிமா பார்ப்போம். இப்போதும்  அந்த தியேட்டர் இருக்கிறது. 

காலையில் பேப்பர் , தபால் வராது மதியம் ஒரு மணிக்கு மேல்தான் வரும். எனவே காலையில் பட்டணம் போய் வங்கி வருவோம். பேப்பர்காரரும் எங்கள் தெருவில் வாங்கும் அத்தனை பேப்பரும் எங்களிடம் தந்து விடுவார். எனவே தின தந்தியுடன், தினமணி யும் படிப்போம்.

 குமுதம் எங்கள் வீட்டில் வாங்குவோம். பக்கத்து வீட்டில் ராணியும் , முதல் வீட்டில் ஆனந்த விகடனும் வாங்குவார்கள். ஏதேனும் சிறப்பு மலர் என்றால் நாங்களும் விகடன் வாங்குவோம்,அப்படி ஆனந்த விகடனின் மாவட்ட மலர் அனைத்தும் வாங்கி உள்ளோம். குமுதத்தில் வைர மோதிரக்கதை அப்போது பிரபலம்.

No comments: